அதிபர் தேர்தலில் பைடன் வெற்றிப்பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு

Joe biden- kamala harris

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றதாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். 306 தேர்வாளர்கள் வாக்குகளை பைடன் பெற்றிருந்தார்.

அவரது வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் ஒடுக்க முயற்சித்தால் மோதல் மூண்டது.

தொடர்ந்து கூட்டுக்குழுக் கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டு எம்.பி.க்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின் ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற செனட் கூட்டம் மீண்டும் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை துணை அதிபர் மைக் பென்ஸ் கொண்டுவந்தார்.

அனைவரது முன்னிலையில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டு சான்றளிக்கப்பட்டது.

இதனிடையே நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பைடன், அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்தார். நவீன காலத்தில் இதுபோன்ற தாக்குதலை நாம் பார்த்ததில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

தற்போது நிகழ்ந்திருப்பது சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் பைடன் குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க சத்தியப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக அவர் சாடியுள்ளார்.

அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது உறுதிமொழியை நிறைவேற்றவும், அரசியலமைப்பைக் காக்கவும் நாடாளுமன்ற முற்றுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அதிபராக பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமைதி காக்கும்படி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் வேண்டுகோள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter