கேலி, கிண்டல்களை கடந்து வந்த பைடன்

அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனின் வாழ்விலும் சில கசப்பான, கரடுமுரடான பக்கங்கள் இருந்துள்ளன.

அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பைடனுக்கு 4 வயது இருக்கும்போதிலிருந்தே திக்கி திக்கி பேசும் குறைப்பாடு இருந்துள்ளது.

ஆனால் அதனையெல்லாம் பொருட்படுத்தாது வல்லரசு நாடான அமெரிக்க அரசியலிலேயே சுமார் 50 ஆண்டுகாலம் நிலைத்து நிற்கிறார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த ஜோ பைடனும் மோதிக்கொள்ளும் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த வார்த்தை மோதலில் சிறிது தடுமாறியுள்ளார் பைடன். ஆனால் அத்தகைய இடர்பாடுகளையெல்லாம் தாண்டி ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக விவாதத்தில் பங்கேற்று தனது கஷ்டத்தை வெளிகாட்டாமல் இருந்து இருக்கிறார் பைடன்.

பைடனின் திக்கு வாயால் நிறையமுறை அவர் கேலி செய்யப்பட்டிருக்கிறார். அவரது உரைகள் சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டுள்ளன. ஆனால் பைடன் அவற்றையெல்லாம் பொருள்படுத்துவதில்லை.

joe biden

அரசியலில் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது பைடனுக்கு இந்த கேலி, கிண்டல்கள் ஏராளமாக நடந்திருக்கின்றன. இருப்பினும் பைடன் அதற்கெல்லாம் தளர்ந்துவிடவில்லை.

பேச்சில் தடுமாற்றம் ஏற்படும்போது ஒரு சில உத்திகளை கடைப்பிடிக்கிறார் பைடன். கால்களால் தரையில் தட்டுவது, பேனாவை ஒரு கையில் இருந்து மற்றொரு கையில் மாற்றிக் கொள்வது, நெற்றியில் உள்ளங்கையால் அழுத்துவதுமாக பல்வேறு செயல்களை செய்து தன் மனதுக்குள் உறுதியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்கிறார்.

எப்போதெல்லாம் அவமானப்படுகிறாரோ அப்போதெல்லாம் பைடனுக்கு ஆறுதலாக இருப்பது அவரது தாய் கேத்ரின் மட்டும் தானாம்…

கேலி செய்பவர்களைப் பற்றிக் குறை சொல்லாதே, எதையும் விளக்கவும் முயற்சி செய்யாதே என தந்தையும் பைடனுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார்.

பெற்றோரின் அந்த செயல்களே பைடன் இன்று ஆலமரமாக உயர்ந்து நின்றதற்கு காரணம் என்றும் சொல்லலாம். கேலிகளை புறந்தள்ளுங்கள் என்ற வாக்கியதை பைடன் அடிக்கடி கூறுவாராம்.

பைடன் போன்று திக்கி திக்கிப் பேசும் குறைபாடு உலகில் 7 கோடி பேருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதையெல்லாம் கடந்தால் மட்டுமே வாழ்வில் சாதித்து அதிகாரத்தை தட்டித்தூக்க முடியும் என்பதற்கு பைடனே மிகச்சிறந்த உதாரணம்.