அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையில்லாதோர் காப்பீட்டிற்கு விண்ணப்பம்!

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்ததுடன் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் வேலை இழப்புகள் அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த மாதம் வரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையின்மை காப்பீட்டு உதவித் தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுனரான அன்எலிசபெத் கொன்கல், “பொருளாதாரம் சார்ந்து காண வேண்டிய பாதிப்பு இன்னும் இருக்கிறது. இந்த நெருக்கடிக்கு நீண்ட காலம் செல்லும்போது, ​​தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் மீண்டும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இயல்பை விட 20.3 % குறைந்துள்ளதாகவும், வரும் நாட்களில் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனாவின் பிடியில் அமெரிக்கா சிக்கியுள்ளதால், அங்கு பல்வேறு நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இருக்கும் வேலையும் வெளிநாட்டவர் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக வெளிநாட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஹெச் 1 பி விசா உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாடுகளை விதித்தார். இதனால் பெரும்பாலான இந்தியர்களும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.