வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து என்ற அறிவிப்பை அரசு திரும்பப்பெற செனட் உறுப்பினர்கள் கோரிக்கை!

ஆன்லைன் வழியாக கல்விப்பயிலும் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் உத்தரவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு திரும்பப்பெற வேண்டுமென செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து வகுப்புகளையும் ஆன்லைனில் நடத்த அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் அங்கு படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வரும் செமஸ்டரில் ஆன்லைனில் மட்டுமே கல்வி பயிலும் எப் 1 மற்றும் எம் 1 விசா பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல வேண்டும் எனவும் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை அறிவித்தது. இதனைக்கேட்ட மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அமெரிக்காவுக்கு பிள்ளைகளை படிக்க அனுப்பிய பெற்றோர்களும் செய்வதறியாது திணறினர். அமெரிக்காவின் இந்த திடீர் உத்தரவால் சுமார் 2 லட்சம் இந்திய மாணவர்களும், 4 லட்சம் சீன மாணவர்களும் பாதிக்கப்படுவர் என கூறப்பட்டது.

students
இந்நிலையில் அமெரிக்க அரசின் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா ரத்து என்ற உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி, ஜனநாயகக் கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியை உறுப்பினர் கமலா ஹாரிஸ், ராபர்ட் மென்டஸ், கோரி பூக்கர் உள்ளிட்ட, 30 செனட் உறுப்பினர்கள் மற்றும் 136 எம்.பிக்கள் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், கடந்த 2018-19 ஆம் கல்வியாண்டி சுமார் 10 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில வந்ததாகவும், தற்போது அவர்களை வெளியேற சொல்வது அபத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அரசின் இந்த உத்தரவு, மாணவர்களின் பணம், கல்வி உள்ளிட்டவற்றை பாதிக்கும். அமெரிக்காவில் கல்விப்பயிலும் அவர்கள், அந்த திறமையால் அமெரிக்கா சமுதாயத்திற்கு ஏதேனும் உதவி செய்கின்றனர். அதனால் இந்த உத்தரவை அரசு திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.