கொரோனா பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட இளைஞர் மரணம்! தவறு செய்துவிட்டதாக கதறல்…

அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கு நடைபெற்ற கொரோனா பார்ட்டியில் கலந்துகொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் எல்லாம் வெறும் வதந்திங்க என நினைத்துக்கொண்டிருக்கின்றனர் பெரும்பாலான அமெரிக்கர்கள். அதற்கு அதிபரும் விதிவிலக்கு அல்ல. இதனால் மாஸ்க் அணியாமல், கூட்டம் கூட்டமாக கடற்கரையில் குவிவதும், போராட்டத்தில் கலந்துகொள்வதுமாக அலட்சியமான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதன்விளைவே அங்கு ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.

san-antonio

இந்நிலையில் அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் இடையே கொரோனா பார்ட்டி என்ற ட்ரெண்ட் வைரலாகிவருகிறது. இந்த பார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் தொற்று ஏற்படுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பே இந்த கொரோனா பார்ட்டியின் மீதான மோகத்துக்கு காரணம். அப்படி நோயை பெற்று ஒரு பரிசு தேவையா? என கேள்வி எழலாம். ஆனால் அதெல்லாம் ஒரு கெத்து என்கின்றனர் அமெரிக்க இளைஞர்கள்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் கொரோனா பார்ட்டியில் கலந்துகொண்டு, முதலாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி பரிசையும் வென்றிருக்கிறார். ஆனால் அந்த பரிசுடன் அவரால் நீண்ட காலம் வாழ முடியவில்லை. அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்த இளைஞர் வைரஸை வதந்தி என எண்ணியதாகவும், தான் இளம் வயது என்பதால் வைரஸ் நம்மை எதுவும் செய்யாது என நம்பியதுமே அவரது உயிரிழப்புக்கு காரணம் என டெக்ஸாஸ் மாகாணத்தின் சான் ஆன்டோனியோ பகுதியில் உள்ள மெத்தடிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவிக்கிறார்.

hospital

உயிரிழப்பதற்கு முன் அந்த இளைஞர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் தவறு செய்துவிட்டேன் என நினைக்கிறேன். என்னுடைய இந்த நிலைமை கொரோனா பார்ட்டிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பாடமாக அமையும்” என அழுக்குரலுடன் பதிவிட்டுள்ளார்.