தங்கையைக் காக்க நாயிடம் கடி வாங்கிய 6 வயது சூப்பர் ஹீரோ!

அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் ஒருவன் உலக அளவிலான பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறான். தங்கை மீதான பாசத்தில் அவன் காட்டிய துணிச்சல் இந்தப் பாராட்டுக்களை பரிசளித்துள்ளது.

அமெரிக்காவின் வியோமிங் பகுதியைச் சேர்ந்த பிரிட்ஜர் என்ற அந்த 6 வயது சிறுவனின் தங்கையை கடிக்க நாய் ஒன்று பாய்ந்து வந்துள்ளது. பாசத்தங்கையைக் காக்க முனைந்த பிரிட்ஜர், நொடி நேரம் கூட யோசிக்காமல் நாயின் முன்னால் பாய்ந்துள்ளான். இதில் பிரிட்ஜரை நாய் தாக்கியது.

Bridger

தன் முகம் எல்லாம் காயமுற்ற போதும், தங்கையை காப்பாற்றிய திருப்தியில் வீடு திரும்பியுள்ளான் பிரிட்ஜர். முகத்தில் 90 தையல்கள் வரை போடப்பட்டு அழகை இழந்தபோதும் சிரித்த முகத்துடன் தன்னம்பிக்கையுடன் இருக்கிறான் சிறுவன். பிரிட்ஜரின் தீரத்தை உலகிற்கு பறைசாற்ற எண்ணிய அவனது அத்தை, இதுபற்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். தனது மருமகனின் சாகசம் குறித்து அவென்ஞர்ஸ் நாயகர்களுக்கு சென்றடைய விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவெஞ்சர்ஸ் குழுவுக்கு மற்றொரு வீரன் கிடைத்திருப்பதாகவும் சிலாகித்திருந்தார் அத்தை. இன்ஸ்டாகிராமில் இதைப் பார்த்த, ஹாலிவுட் நட்சத்திரங்களான மாக் ரஃபல்லோ, ஆன் ஹாத்வே உள்ளிட்ட பிரபலங்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். பிரிட்ஜரை உச்சி முகர்ந்து வாழ்த்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.