அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றும் வெளிநாட்டினர்! பிரபலங்கள் முதல் சாதாரண பணியாளர்கள் வரை…

அமெரிக்காவுக்குள் பணிபுரிவதற்கான விசாக்களை வழங்க முடியாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததும் கடுமையான எதிர்ப்புக் கிளம்புவதற்கு பல அடிப்படையான காரணங்கள் இருக்கின்றன.

இயற்பியல் உலகத்துக்கு ஒளியைப் பாய்ச்சிய விஞ்ஞானி ஆர்பல்ட் ஐன்ஸ்டீன், மகத்தான் கண்டுபிடிப்புகளைத் தந்த நிக்கோலா டெஸ்லா, புரட்சிப் பாடகர் பாப் மார்லி என அமெரிக்காவைக் கட்டமைத்த முக்கியமானவர்கள் பலர் வெளிநாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஏன் டெர்மினேட்டர் புகழ் அர்னால்ட் ஸ்வாஸநேகரும், நாம் எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கூகுள் தேடுபொறியை உருவாக்கிய செர்ஜி பிரினும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். இரண்டாம் உலகப் போரின்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட கடிதம்தான் ஜெர்மனியின் அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை முடக்குவதற்கு உதவியது. போர் முடிந்த பிறகு ராக்கெட் தொழில்நுட்பங்கள் அமெரிக்காவுக்குக் கிடைத்ததும் ஜெர்மனியில் இருந்து விஞ்ஞானிகளின் மூலமாகத்தான். வெளிநாட்டுக்காரர்கள் இல்லாது போயிருந்தால் சமகால அமெரிக்காவின் வரலாறே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

இன்றும் அமெரிக்காவின் சாதாரண வேலைகளைச் செய்வதற்குக்கூட குடியேறிய மக்களின் உதவி தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்க மக்கள் தொகையில் 14 சதவிகிதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள். பணியாற்றும் ஊழியர்களில் இவர்களின் பங்கு சுமார் 17 சதவிகிதம் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறிவியல், தகவல் தொழில்நுட்பத்துறை, மருத்துவம் போன்றவற்றை என்றில்லாமல் விவசாயம், மீன்பிடித்தல், சுகாதாரத்துறை, கட்டுமானத்துறை என குறைந்த வருவாய் கிடைக்கும் பணிகளிலும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஈடுபடுகிறார்கள். புகழ்பெற்ற பல நிறுவனங்கள் குடியேறி மக்களாலேயே இயங்கி வருகின்றன.
இப்படி வெளிநாட்டுக் குடியேறிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, திடீரென குடியேற்றத்துக்கு தடை விதிப்பது முற்றிலும் அதன் ஆன்மாவுக்கே எதிரானது.