அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் வளர்ப்பு நாய் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து ஜார்ஜியா மாகாண சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாயை பராமரித்துவந்த வீட்டின் உரிமையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வளர்த்த 6 வயது நாய்க்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாய்க்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அதற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் அந்த நாயை கவனித்து வந்தனர். ஏற்கனவே நாய்க்கு நரம்பு மண்டலத்தில் கோளாறு இருந்திருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

அமெரிக்காவில் ஏற்கனவே கரோலினா மாகாணத்திலுள்ள ஒரு நாய்க்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவும் என்றும். விலங்குகளுக்கு கொரோனா பரவல் குறைவு என்றும் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக நியூயார்க்கின் வனவிலங்கு பூங்காவில் 4 வயதான நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.