அமெரிக்காவில் 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு

Us flag

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த பைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தும் பணி அமெரிக்காவில் தீவிரமாக ஒருபுறம் நடைபெற்றுவந்தாலும் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுக்குள் வராமல் இருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது.

Joe Biden

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. வெள்ளை மாளிகை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் விதமாக 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அதிபர் பைடன் தெரிவித்தார். மேலும் உலகப்போரில் இறந்தவர்களைவிட கொரோனாவால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் பைடன் கூறினார்.

அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மெளன அஞ்சலி செலுத்தினர்.