ஹூஸ்டனிலுள்ள தூதரகத்தை மூட உத்தரவிட்ட அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட உத்தரவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனாவில் உள்ள ஒரு அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை 72 மணி நேரத்திற்குள் மூடும்படி அமெரிக்கா நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்த முடிவை திரும்பப்பெறாவிடில், தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என சீனா கூறியிருந்தது. இந்நிலையில் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் செங்க்டு என்ற நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுமாறு சீனா உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அமெரிக்காவின் நியாயமற்ற நடவடிக்கைக்கு சரியான முறையில் பதில் தரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவுடன் தற்போது நிலவி வரும் உறவு சீனா விரும்பியது அல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செங்க்டு என்ற இடத்தில் இயங்கிவரும் அமெரிக்க துணைத் தூதரகம் 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது எனவும், அங்கு பணியாற்றி வரும் 200 பேரில், 150 பேர் உள்நாட்டவர் எனவும் இணையதளம் ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.

china-us

ஹூஸ்டன் நகரில் செயல்பட்டு வரும் சீனாவின் துணைத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா கடந்த 2 தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனத் தூதரகத்தில் ஆவணங்களும் காகிதங்களும் எரிக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்தே மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறினார். அவை என்னவென்று பதிலளிக்க வேண்டியது சீனத் தூதரக அதிகாரிகளின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetusa

Twitter : https://twitter.com/tamilmicsetusa