அமெரிக்காவிலும் ஜாதி பார்க்கிறார்களா இந்தியர்கள்? 2 பேர் மீது புகார்

இந்தியாவுல தான் சாதி பிரச்னை, அடிதடி, வெட்டு குத்து பிரச்னை என்றால் அமெரிக்காவிலும் இதே தானாம்… அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து செல்லும் நபர்கள், அங்கு இந்தியர்களை பார்த்தால் அய்யோ எங்க நாட்டு மனிதர்கள் என கட்டி அணைத்து கொண்ட காலங்கள் மறைந்து, நீங்க இந்தியாவா? என்ன ஜனங்க என கேட்கும் சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் 2015 ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். சிஸ்கோ தலைமையகத்தில் சீஃப் என்ஜினியராக வேலை பார்த்து வரும் அவர், பட்டியலினத்தை சேர்ந்தவர். அதே நிறுவனத்தில் என்ஜினியரிங் மேனேஜராக வேலை பார்ர்ப்பவர் சுந்தர் ஐயர், மற்றும் ரமணா கொம்பெல்லா. இவர்கள் 2 பேரும் பட்டியலின ஊழியரை சாதியை காட்டி பழித்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலை ஏற்படுத்திக்கொடுத்த சிஸ்கோ நிறுவனம் மீதும், சுந்தர் ஐயர் மற்றும் ரமணா கொம்பெல்லா மீதும் சான் ஜோஸிலுள்ள நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் குறித்து விசாரித்து கொண்டிருப்பதாகவும், சட்டத்தின்படி வேலை செய்யும் இடங்களில் எல்லாருமே ஒன்றாகவே, சரிசமமாகதான் நடத்தப்படுகிறார்கள் என்றும் சிஸ்கோ நிறுவன செய்தி தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் மக்கள் உரிமைகள் குழு 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க பணியிடங்களில் 67% பட்டியலின ஊழியர்கள் ஜாதிய ரீதியலான துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் எப்படி வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் என வேறுபாடு பார்க்கிறார்களோ அதேபோல் அங்குள்ள இந்தியர்கள், உயர் சாதி, தாழ்ந்த சாதி பார்ப்பது ஆய்வறிக்கையில் புலப்பட்டுள்ளது. கடல்கடந்து சென்றாலும் சாதிமனப்பான்மை இந்தியர்களிடம் மறையவில்லை என்பது மனதை ரணமாக்க கூடிய விஷயமாகவே தெரிகிறது.