மீண்டும் பொதுப்பணிகளில் ஈடுபட ட்ரம்ப் தயார்- மருத்துவர்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், பொதுப் பணிகளுக்கு‌ திரும்பத் தயாராகிவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த 1ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலில் வெள்ளை மாளிகையில் தனிமைபடுத்தப்பட்ட ட்ரம்ப் திடீரென ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 4 நாட்கள் சிகிச்சை முடிந்து கடந்த 5ஆம் தேதி மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில் ட்ரம்புக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை முடிந்துவிட்டதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளார். கொரோனா சிகிச்சைக்கு ட்ரம்பின் உடல் சிறந்தமுறையில் ஒத்துழைத்ததாகவும், கடந்த சில நாட்களாகவே ட்ரம்பின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறியுள்ள சீன் கான்லி, பொதுப் பணிகளில் ஈடுபட ட்ரம்ப் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Trump
Image: BBC

இதனிடையே பாக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ட்ரம்ப் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சனிக்கிழமை முதல் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட ஆர்வமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையுடன் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி 10 நாட்கள் முடிகிறது. இதனிடையே அதிபர் பணிகளை மேற்கொள்ளும் அளவுக்கு ட்ரம்ப் ஃபிட்டாக இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்ய தனி ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதிநிதிகள் அவை சபாநாயகர் நான்சி பெலோசி, இதற்காக 25ஆவது சட்டத்திருத்தத்தை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுப் பணிகளுக்கு திரும்ப ட்ரம்ப் தயாராக உள்ளார் என மருத்துவர்கள் கூறினாலும், ட்ரம்பிடம் இருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவாது என்பதை உறுதியாக கூற முடியாது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்கலாமே: எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் கொடுத்த வரம்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts