டிக்டாக், வீசாட் நிறுவனத்துடன் பரிவர்த்தனை வைத்துக்கொள்ளக்கூடாது: ட்ரம்ப்

டிக்டாக் செயலின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனத்துடன் அமெரிக்கர்கள் 45 நாட்களுக்குப் பிறகு எந்த பரிவர்த்தனையும் வைத்துக்கொள்ளக்கூடாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தியா- சீனா இடையிலான மோதலை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பயனர்களின் தகவல்களை சீனா திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதனால் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாடுகளில் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனமாக மாற்றினால் இழந்த வருவாயையும், நம்பக தன்மையை டிக்டாக் மீண்டும் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது.

tiktok, wechat

இந்நிலையில் ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவில் டிக்டாக் செயலி சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக தவறான தகவல்களை பரப்ப பயன்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய டிக்டாக்கின் உரிமையாளர்களுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டி உள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் போலவே வீசாட் செயலியின் உரிமையாளரான டென்செண்ட் நிறுவனத்துடனும் 45 நாட்களுக்குப் பிறகு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க அரசு அளிக்கும் தொலைபேசி உள்ளிட்டவற்றில் டிக்டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க செனட் அவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது. டிக்டாக் செயலியை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்காவிட்டால் தடை விதிக்கப்படும் என ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியாவும் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நியூயார்க் நகர சுகாதாரத்துறை ஆணையராக இந்திய வம்சாவளி நியமனம்