முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவில், இதுவரை முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், முதல்முறையாக முகக்கவசத்துடன் வெளியே வந்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை முகக்கவசம் அணிவதைதவிர்த்து வந்த ட்ரம்ப்பிடம் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த ராணுவ வீரர்களை காண வந்தபோது கருநீலநிற முகக்கவசத்தை அணிந்து கொண்டு ட்ரம்ப் மருத்துவமனைக்கு வந்தார்.

trump

இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாம் முகக்கவசத்திற்கு எதிரான நபர் அல்ல என்றும், முகக்கவசத்தை எந்தஇடத்தில் எந்த சூழலில் அணிய வேண்டும் என்று இருப்பதாகவும், அதற்கேற்ப முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், “மாஸ்க் அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம், எனக்கு மாஸ் அணிவதில் எந்த பிரச்னையும் இல்லை” என்றும் அதிபர் தெரிவித்தார்.

trump

கடந்த மாதம் துல்சாவில் நடந்த பிரசார கூட்டத்தின்போது ட்ரம்ப் மற்றும அவரது ஆதரவாளர்கள் முகக் கவசம் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்றதன் காரணமாக அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகளின் அறிவுறுத்தலையடுத்து ட்ரம்ப் முகக்கவசம் அணிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.