தப்பு தப்பா தகவல பரப்புவது! சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்ட ட்ரம்ப்பின் பதிவுகள்

கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்கள் இருந்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த பதிவுகளை ட்விட்டர், பேஸ்புக் நிறுவனங்கள் நீக்கியுள்ளன.

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 40 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும் வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் பெரிதும் அதிகரித்துவரும் நிலையிலும், பள்ளிகளை திறக்க மாநில ஆளுநர்களுக்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழுத்தம் கொடுத்துவருகிறார்.

Trump

அமெரிக்காவில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக தான் அளித்த பேட்டியை ட்ரம்ப் தனது ட்விட்டர், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அதில் குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது, அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் தொற்றைக் கொண்டு செல்ல மாட்டார்கள் என கூறியிருந்தார். ஆனால் உலக சுகாதர அமைப்பு மற்றும் மருத்துவ ஆராய்சிக்குழுக்கள் குழந்தைகளும் கொரொனாவால் எளிதில் பாதிக்கப்படுவார்கள் என கூறியிருப்பதால், ட்ரம்ப்பின் பதிவுகள் தங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானவை என மேற்கோள்காட்டி ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் அந்த வீடியோவை நீக்கியுள்ளன. முன்னதாக இதே போன்று தவறான பதிவுகளை இட்டதாக ட்ரம்பின் மகன் பகிர்ந்தவையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வெங்காயத்தை கண்டு தெறித்து ஓடும் அமெரிக்கர்கள்!