பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது!

ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் கடந்த சில நாட்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் மோசடி பதிவுகள் பதிவிடப்பட்டிருந்தன. ஆயிரம் டாலர்கள் செலுத்தினால் இரண்டாயிரம் டாலர்களாக திருப்பித்தரப்படும் என்று பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் வெளியான பதிவுகள் கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சி அடைய வைத்தன. இதனை நம்பி பலரும் பணம் செலுத்தி ஏமாந்தனர். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ட்விட்டர் நிறுவனம், பாதுகாப்பு அம்சங்களை மீறி நடந்துள்ள ஹேக்கிங் பிரச்னையை குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Twitter hack
Image credit: BBC

இதுகுறித்து விசாரணை நடத்திய ட்விட்டர் நிறுவனம், புளோரிடாவை சேர்ந்த நிமா பாசீல், இங்கிலாந்தை சேர்ந்த ஷேப்பர்டு மற்றும் 17 வயதுடைய கிராகாம் கிளார் ஆகியோர் ஹேக்கிங்கில் ஈடுபட்டதை கண்டறிந்தது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த  ட்விட்டர் ஹேக்கிங்கின் மூலம் கிராகாம் 1லட்சம் டாலர்கள் அளவில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பிரபலங்களின் ட்விட்டரை சீனா அல்லது ரஷ்ய நாட்டை சேர்ந்த பிரபல ஹேக்கர்கள் ஹேக் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு சிறுவனால் இச்சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாம்: கொரோனா… கோடீஸ்வரர் பில் கேட்ஸை கிண்டலடித்த எலான் மஸ்க்!