கொரோனா மருந்து தயாரிப்பில் இரு நிறுவனங்கள் வெற்றி!

corona vaccine

கொரோனாவுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பு ஆய்வுகளில் அடுத்தடுத்து இரு நிறுவனங்கள் வெற்றி பெற்றிருப்பது உலக அளவில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனாவால் உலக மக்கள் துவண்டு போயிருக்கும் நிலையில், இம்மாதத்தில் இரண்டாவது முறையாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் தடுப்பு மருந்து 92 சதவிகிதம் வரை வெற்றி பெற்றிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான மாடர்னாவிடம் இருந்து அடுத்த மகிழ்ச்சிகரமான செய்தி வந்திருக்கிறது.

இந்நிறுவனம் உருவாக்கிய தடுப்பு மருந்து சுமார் 30 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தியதில், 94 புள்ளி 5 சதவிகிதம் வரை நோயை எதிர்த்து போரிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

மாடர்னா மருந்து நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஸ்டீபன் ஹாக், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான இந்த ஆய்வு மிக முக்கியமான மைல் கல் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவின் கோர பிடியில் இருந்து உலக மக்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த ஆய்வு முடிவுகள் விதைத்திருப்பதாக உற்சாகம் பொங்க தெரிவிக்கிறார் ஹாக்.

அதே நேரம் மாடர்னா நிறுவனத்தால் மட்டும் கொரோனாவால் எழுந்த பிரச்னையை தீர்க்க முடியாது என்றும், உலக அளவிலான மருந்து தேவையை பூர்த்தி செய்வதற்கு மேலும் பல தடுப்பு மருந்துகள் அவசியம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

corona vaccine

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்தின் இந்த அறிவிப்புகள், அந்நாட்டு மக்கள் மனதில் புதிய நம்பிக்கையை துளரச் செய்திருக்கிறது.

அவசர நோக்கத்திற்காக இந்த மருந்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் கொரோனா தாக்க அதிக வாய்ப்புள்ளவர்கள், முதியவர்கள் என ரேஷன் முறையில் மட்டுமே மருந்துகள் விநியோகிக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.

மக்களின் தேவைக்கேற்ப இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி ஊசிகளை தயாரிக்க மாடர்னா இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதற்கு இணையாக ஃபைசர் நிறுவனமும் 5 கோடி ஊசிகளை தயாரிக்க முன் வந்திருக்கிறது.

இந்தியாவிலும் சீரம் நிறுவனம் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு முன்னேறியிருக்கிறது. இதனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து தயாரிப்புகளிலும், ஆய்வுகளிலும் நம்பிக்கை கீற்று மிக அருகாமையில் தென்பட தொடங்கியிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: ராணுவ வீரரை காதலிக்கும் மெலனியா ட்ரம்ப்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter