வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அரசின் முடிவை எதிர்த்து ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வழக்கு!

வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றும் அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து, உலகப் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன, அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு குடியுரிமைத்துறை அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வரும் உலகப் புகழ்பெற்ற ஹார்வேர்டு மற்றும் எம்.ஐ.டி. பல்கலைக்கழகங்கள் பாஸ்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

ஆன்லைன் வகுப்புகளைக் காரணம் காட்டி வெளிநாட்டு மாணவர்களை வெளியேறச் சொல்வது சட்டவிரோதம் என்றும் அந்தப் பல்கலைக்கழகங்கள் மனுவில் தெரிவித்துள்ளன. மாணவர்கள் நலனில் அரசு அக்கறை காட்டவில்லை என்றும், கால அவகாசமும் வழங்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது.இந்த உத்தரவுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் மேற்கண்ட கல்வி நிறுவனங்கள் முறையிட்டுள்ளன.