ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதா சட்டம் அமல்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

அதன் மூலம் இந்திய வம்சாவளி மற்றும் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமின்றி கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமான துளசேந்திரபுரம் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்க வரலாற்றில் ஆசிய அமெரிக்க பெண் துணை அதிபரானதை அந்நாடே கொண்டாடியது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் பல முக்கிய பதவிகளுக்கு இந்திய வம்சாவளியினரை நியமித்து அழகுபார்த்தார் அதிபர் பைடன்.

இதனிடையே அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்தில் அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 6 பெண்கள் ஆசிய வம்சாவளியினர்.
இதையடுத்து அமெரிக்காவில் ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன.

இந்நிலையில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் விதமான மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இதனால் அந்த மசோதா அமலுக்கு வந்தது.

இதன்மூலம் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெற்று குற்றங்களை பதிவு செய்ய தனி பிரிவு, உதவி எண்கள் தொடங்கப்படும். பிரச்னைக்கு உள்ளாகுபவர்கள் அந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

இந்த மசோதாவுக்கு கையெழுத்திட்டதற்காக பைடனுக்கு ஆசிய அமெரிக்கர்கள் நன்றி தெரிவித்துவருகின்றனர்.