பால்டிமோரில் பயங்கர வெடிவிபத்து… ஒரு பெண் உயிரிழப்பு, 3 பேர் காயம்!

பால்டிமோரில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மேரிலாண்ட் பால்டிமோர் நகரில் இன்று வீடு ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இது பயங்கரவாத தாக்குதல் இல்லை. இயற்கை எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் எதனால் விபத்து ஏற்பட்டது என்பது விசாரணைக்குப் பிறகே தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பெரிய வெடிவிபத்து காரணமாக மூன்று விடுகள் தரைமட்டமாகின. ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயம் அடைந்த நிலையில் மூன்று பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே வேறு யாராவது சிக்கியுள்ளார்களா என்று பால்டிமோர் தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு பால்டிமோர் நகர மருத்துவப் பிரிவுகளும், பால்டிமோர் கவுண்டி தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியில் உள்ள வரிசை வீட்டைச் சேர்ந்த கெவின் மேத்யு கூறுகையில், “பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அந்த பகுதியில் குழந்தைகள் தாங்கள் உள்ளே மாட்டிக்கொண்டோம் என்ற அலறல் சத்தமும் கேட்டது. இது தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்” என்றார்.

பால்டிமோர் கேஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு இது தொடர்பாக காலை 9.54 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். நிலைமை பாதுகாப்பாக இருக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து செயலாற்றி வருகிறோம். கேஸ் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டால் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபடலாம்” என்று அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் லிண்டா ஃபோய் தெரிவித்தார்.

இந்த பகுதியில் வீடுகளுக்கு வழங்கப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயு கசிவு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்று தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் இதை முறையாக கையாளாததே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு குழாய் அமைக்கப்பட்டது. அதன் ஆயுள் கடந்துவிட்டதால் உடனடியாக அதை மாற்ற வேண்டியது அவசியம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.