இந்தியாவ அடிச்சா…எங்களுக்கு வலிக்கும்… சீனாவுக்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்!

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன. இரு நாடுகளுக்குமிடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டிக்டாக், ZOOM, SHARE IT, CLEANMASTER, XENDER, UC BROWSER, WE CHAT, HELO, CLASH OF KINGS , CLUB FACTORY உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், சீனாவை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்நாட்டில் வாழும் தைவான் மற்றும் திபெத் நாட்டை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். சீனா இந்தியா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்துவதாகவும், ராணுவ பலத்தை காட்டி மிரட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். சீனா உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் என்றும் போராட்டம் நடத்திய அமெரிக்கவாழ் தமிழர்கள் தெரிவித்தனர். மேலும் சீன பொருட்களை புறக்கணிக்கப்போவதாகவும் உறுதியளித்தனர். ஏற்கனவே கொரோனா வைரஸ் விவாகரத்தில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்துவரும் சூழலில் தென் சீன கடல் விவகாரம், இந்திய உடனான லடாக் எல்லை பிரச்னை உள்ளிட்டவைகள், சீனாவின் மேலான வெறுப்பை அதிகரிக்கவைத்துள்ளன.