அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கைது வாரண்ட் பிறப்பிப்பு! உதவி செய்ய மறுத்த இண்டர்போல்

ஈரான் ராணுவ படைத்தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஈரான் உடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்ததால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில்தான் இருநாடுகளுக்குமிடையே பயங்கர தாக்குதல் ஏற்பட்டது. கடந்த ஜனவரி ஆதம் ஈரான் ராணுவ குத்ஸ் படைத்தளபதி குவாசிம் சுலைமானி ஈராக் சென்றிருந்த போது, அமெரிக்க படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தன. இரு நாடுகளுக்கிடையேயான தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


குவாசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக ட்ரம்ப் மற்றும் 30 பேரை கைது செய்ய டெஹ்ரான் தலைமை நீதிபதி அலி அல்காசிமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிபர் ட்ரம்ப் தப்பிவிடாமல் இருக்க இண்டர்போலின் உதவியையும் ஈரான் நாடியுள்ளது. இதனால் ட்ரம்ப்புக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க ஈரான் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர் மீது பயங்கரவாத மற்றும் கொலைக் குற்றச்சாட்டு வழக்குகள் தொடரும் என்றும் நீதிபதி அல்காசிமர் தெரிவித்துள்ளார்.ஆனால் ட்ரம்பை கைது செய்ய உதவி செய்யமுடியாது என இண்டர்போல் தெரிவித்துள்ளது. அரசியல்ரீதியாக, மதரீதியாக எந்தவிதமான நடவடிக்கையையும் யாருக்கு எதிராகவும் எடுக்க முடியாது என்றும் இண்டர்போல் தெரிவித்துள்ளது.