தள்ளிவைக்கப்படுகிறதா அதிபர் தேர்தல்..?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால், அதிபர் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தாமே உறுதியான மனிதன் என்று முழங்கிவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை, கொரோனா வைரஸ் மருத்துவமனையில் முடக்கிப் போட்டிருக்கிறது. பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றால்கூட குறைந்தபட்சம் 10 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க அரசின் விதி. இது தேர்தல் நடைமுறைகளைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்னும் இரண்டு நேரடி விவாதங்களில் பங்கேற்க வேண்டும். அடுத்த விவாதம் வரும் 15-ஆம் தேதி நடக்க இருக்கிறது. உடல்நலம் தேறிவந்தால் மட்டுமே அந்த விவாதத்தில் ட்ரம்பால் பங்கேற்க முடியும்.

US presidential elections

குறைந்தபட்சம் அடுத்த 10 நாள்களுக்கான பரப்புரைக் கூட்டங்களை ரத்து செய்வது பற்றி ட்ரம்பின் பரப்புரை நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி மூலம் ட்ரம்பை பங்கேற்கச் செய்ய முடியுமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விவாதங்களை தள்ளிவைக்கலாம், பரப்புரைக் கூட்டங்களை ரத்து செய்யலாம்; ஆனால் தேர்தலைத் தள்ளி வைக்க முடியுமா என்பதுதான் அமெரிக்க அரசியல் நிபுணர்கள் விவாதித்து வரும் கேள்வி.

விதிகளின்படி, நவம்பர் மாதம் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமையன்று அதிபர் தேர்தலை நடத்த வேண்டும். அதன்படியே நவம்பர் 3-ஆம் தேதியன்று தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேதியை மாற்ற அதிபரால் முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் அனுமதி பெற்றாக வேண்டும். பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சியினர் பெரும்பான்மையுடன் இருப்பதால், அங்கு தேர்தலைத் தள்ளி வைப்பதற்கான அனுமதி நிச்சயமாகக் கிடைக்காது.

ஒருவேளை ட்ரம்பால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், குடியரசுக் கட்சியினர் புதிய வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும். துணை அதிபர் மைக் பென்ஸ் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டால், துணை அதிபருக்கு புதிய வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். அமெரிக்க வரலாற்றில் இதுவரை வேட்பாளர்கள் மாற்றப்பட்டது இல்லை. தேர்தலும் தள்ளிவைக்கப்பட்டதும் இல்லை.

இதையும் படிக்கலாமே:  வீடு திரும்பினார் அதிபர் ட்ரம்ப்! இன்னும் 10 நாட்களுக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

 

Related posts