உலக நாடுகளுக்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்கா!

corona vaccine

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்தால் தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது.

இதன்விளைவாக அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர் இதனை தொடர்ந்து மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இதனிடையே அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

White House

இந்நிலையில் பல்வேறு உலக நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று அடுத்த 6 வாரங்களில் 8 கோடி தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவருகிறது. இக்கட்டான சூழலில் செய்ய வேண்டிய சரியான, புத்திசாலித்தனமான செயல் மற்றவர்களுக்கும் உதவுவது என பைடன் தெரிவித்துள்ளார்.