ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராகிறார் இந்திய வம்சாவளி?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் களம் காண்கின்றனர். தேர்தலில் ஜோ பிடனே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அண்மை காலமாக வெளிவரும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனிடையே துணை அதிபராக அவர் யாரை தேர்வு செய்வார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஜோ பிடன், பெண் ஒருவரை தான் துணை அதிபராக தேர்வு செய்வேன் என ஏற்கனவே கூறி இருந்தார்.

Kamala Harris
Kamala Harris

இந்நிலையில் ஜோ பிடன் , கையில் வைத்திருந்த தாள் ஒன்றில் கமலா ஹாரீஸின் குணங்கள் பற்றி குறித்து வைத்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. காழ்ப்புணர்ச்சி இல்லாதவர், பரப்புரைகளில் உதவுகிறார் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அவர் வைத்திருந்த தாளில் இருந்தன. எனவே கமலா ஹாரீஸூக்கே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. கமலா ஹாரீஸ், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பின்னர், ஜோ பிடனுக்காக அதனை வாபஸ் பெற்றார்.

கமலா ஹாரீஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். கமலாஹாரீஸ், 2016ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. இதற்கு முன்பு கலிபோர்னியா மாகாணத்தில் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர். அதிபர் ட்ரம்பை தீவிரமாக விமர்சித்து வரும் இவர் ஜனநாயக கட்சியில் வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரம்.

இதையும் படிக்கலாமே: கொரோனா எதிரொலி: கேமராவுக்கு பெயர் பெற்ற கோடக் நிறுவனம் மருந்து நிறுவனமாகிறது!