பதவியேற்பு விழாவை அழகாக்கும் இந்திய கோலங்கள்

Kolam

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

இதையடுத்து அவர் வெள்ளை மாளிகையில் குடியேற உள்ள நிலையில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அங்கிருந்து வெளியேற உள்ளார்.

இதற்கிடையில் பைடன் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு தலைநகர் வாஷிங்டனிலும் குறிப்பாக நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வாஷிங்டனுக்கு செல்லும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்திவைக்கப்பட்டன.

வெள்ளை மாளிகையைச் சுற்றியுள்ள கடைகள், வணிக வளாகங்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையை சுற்றி 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதமேந்திய காவலர்கள் பணியில் உள்ளனர்.

Pictures of various kolams placed together in front of the white house to welcome Joe Bidden and Kamala Harris

இந்நிலையில் அமெரிக்காவின் துணை அதிபராக வரும் 20 ஆம் தேதி கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கும் நிலையில் பதவியேற்பு விழாவை மேலும் அழகாக்க தமிழர் பாரம்பரியமான கோலத்திற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜோபைடன் மற்றும் கமலா ஹாரீஸை கோலமிட்டு வரவேற்க திட்டமிட்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இதற்காக ஆயிரத்து 800 பேரிடம் இருந்து கோலங்களை பெற்றுள்ளது.

டைல்ஸ்களில் இந்த கோலங்கள் ஒட்டப்பட்டு நாடாளுமன்ற கட்டடம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. கோலங்கள் நேர்மறை எண்ணத்தை தருவதோடு புதிய தொடக்கத்தை மேலும் அழகாக்கும் என்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறுகின்றனர் அமெரிக்கா வாழ் இந்தியர்கள்.

அமெரிக்கா துணை அதிபராக பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸின் தாய், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நாடாளுமன்ற வன்முறையில் சிலரை பணயக் கைதியாக பிடிக்க திட்டம்?