அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு!

online classes

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 57 லட்சத்து 5 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும் வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

online classes

இந்நிலையில் ஆன்லைன் கல்வியால் அமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் பள்ளிகள் இயங்காத நிலையில் மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகுப்புகளில் பங்கேற்பதற்குத் தேவையான மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய 3 கணினி தயாரிப்பாளர்களான லெனோவா, ஹெச்.பி. டெல் ஆகியவை தேவையை விட 50 லட்சம் கணினிகளுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பள்ளி நிர்வாகங்களிடம் தெரிவித்துள்ளன. ட்ரம்ப் தலைமையிலான அரசு சீனப் பொருட்கள் மீது கட்டுப்பாடுகள் விதித்தும் இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் ஆன்லைன் கல்வியை தொடருவது கேள்விக்குறியாகியுள்ளது.