இந்தியாவை பாருங்கள்… எவ்வளவு அசுத்தமாக உள்ளது: ட்ரம்ப் குற்றச்சாட்டு

Trump

உலகளாவிய காற்று மாசுபாட்டுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளே காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளர்களான ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான இறுதி விவாதம் நாஷ்வில்லே நகரில் நடைபெற்றது.

கொரோனா, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை என்பிசி செய்தியாளர் கிறிஸ்டவன் வெல்கர் தொகுத்து வழங்கினார்.

பருவநிலை மாறுபாடு குறித்த விவாதத்தின் போது ட்ரம்ப், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளே காற்று மாசை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார்.

Trump

சீனாவை பாருங்கள் எவ்வளவு தூய்மையற்ற நாடாக இருக்கிறது என சாடிய ட்ரம்ப், ரஷ்யாவையும், இந்தியாவையும் பாருங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என விமர்சித்தார். அமெரிக்காவுக்குத்தான் பருவநிலை மாறுபாட்டில் அதிக கெடுபிடி இருப்பதாகவும், பல கோடி ரூபாயை செலவழிக்க வேண்டும் என்பதாலேயே பாரிஸ் பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்திலிருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் ட்ரம்ப் விளக்கமளித்தார். மேலும் தனது தலைமையிலான நிர்வாகமே அமெரிக்காவின் சுற்றுச்சூழலை சிறப்பாக பாதுகாத்தது எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அமெரிக்கா தன்னிறைவு அடைந்துவிட்டதாகவும் ட்ரம்ப் கூறினார். இதனைக் கேட்ட பைடன் காலநிலை மாற்றம், காலநிலை வெப்பமயமாதல், புவி வெப்பமடைதல் ஆகியவை மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் எனத் தெரிவித்தார்.

அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாதத்தின்போது அதிபர் ட்ரம்ப், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இந்தியா வெளிப்படையாக அறிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் காற்று மாசுவுக்கும் இந்தியாவே காரணம் என அதிபர் ட்ரம்ப் மீண்டும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபோன்ற கருத்துகள் அமெரிக்கவாழ் இந்தியர்களின் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter