ஒரே நேரத்தில் ஒபாமா, பில்கேட்ஸ் உள்ளிட்டோரின் ட்விட்டரில் நடந்த ஹேக்கிங்!

சமூக வலைதளமான ட்விட்டரில் நடந்த ஹேக்கிங் மூலம் ஒரு லட்சம் டாலர் கிரிப்டோ கரன்சி மோசடி நடந்திருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

ஆயிரம் டாலர்கள் செலுத்தினால் இரண்டாயிரம் டாலர்களாக திருப்பித்தரப்படும் என்று பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் ஒளிர்ந்த பதிவுகள் கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சி அடைய வைத்தன. இதனை நம்பி பலரும் பணம் செலுத்தினர். முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அதிபர் பதவி வேட்பாளர் ஜோ பைடன், டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலோன் முஸ்க், வாரன்பஃபெட், மைக் ப்ளூம்பெர்க், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் என பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் மோசடி பதிவுகள் பதிவிடப்பட்டிருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபலங்கள் தங்கள் பதிவுகளை அவசர அவசரமாக நீக்கினர். பலரால் இந்த பதிவுகளை நீக்க முடியவில்லை. டெஸ்லா தலைமை அதிகாரி எலோன் மஸ்க் தனது ட்விட்டர் கணக்கில் வந்த மோசடி பதிவை ஒவ்வொருமுறை நீக்கும்போதும் மீண்டும் புதிய பதிவு தென்பட்டது.

Leaders
Image credit: BBC

இதேபோல அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோ, உலக பணக்காரர் வாரன் பஃபெட், உபெர், ஆப்பிள் போன்றவற்றின் கார்ப்பரேட் கணக்குகளும் பாதிக்கப்பட்டன. இது பிட்காயின் மோசடி பதிவு என்று அறிந்து உணர்வதற்குள் 300 பேரிடம் இருந்து ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமான ( 80 லட்சம் ரூபாய் அளவிலான ) கிரிப்டோகரன்சி மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே,இது ட்விட்டருக்கான கடினமான தினம் என்று வருத்தம் தெரிவித்துள்ளளார். நடந்ததை பற்றி அறிந்து அனைவருக்கும் விவரம் பகிரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு அம்சங்களை மீறி நடந்துள்ள ஹேக்கிங் பிரச்னையை சரிசெய்து வருவதாக கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம், பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. உயர்பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது பற்றி விசாரணை நடத்திவருவதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.