இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மியாமி கட்டடம்

மியாமியில் இடிந்து விழுந்து 24 பேரின் உயிரை பலி வாங்கிய அடுக்குமாடி கட்டிடம் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி இரவு பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், முதற்கட்டமாக இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 35 பேர் மீட்கப்பட்டனர்.

தொடர்ந்து, இரவு பகலாக இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் 121க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கார் பார்க்கிங் பகுதியில் சுவற்றில் துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான முயற்சிகள் நேற்று வரை நடைபெற்றுவந்த நிலையில், தற்போது அந்த பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னர் அவர்களை தேடும் பணி மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எல்சா என்றும் புயல் மியாமியை நோக்கி வருகிறது.

அதனால் பாதி சிதைந்த கட்டிடத்தால் அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம் என கருதி அது முழுவதுமாக தகர்க்கப்பட்டது.

12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் காணாமல் போனவர்களுக்கு நினைவு அனுசரிக்கப்பட்டது.

அண்டை நகரான சர்வ்சைட் நகர குடியிருப்புவாசிகள் சார்பாக காணாமல் போனவர்களின் புகைப்படங்களுக்கு மலர்கள் வைத்து நினைவு கூறப்பட்டது