ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு

George Floyd death anniversary

மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட், கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி கள்ளநோட்டு வைத்திருந்தாக போலீஸ் வாகனத்தில் ஏற்ற காவல் அதிகாரிகள் முயற்சித்தனர்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். இதில் மூச்சுவிடமுடியாமல் ஜார்ஜ் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது.

இனவெறி அதிகரித்ததாக கூறி பிளாக் லைவ் மேட்டர்ஸ் குழுவினர் ஓராண்டுக்கும் மேலாக நடத்திய போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

டெரிக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவரை குற்றவாளி என அறிவித்த ஹென்னெபின் மாவட்ட நீதிமன்றம், 40-ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது

ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்து ஓராண்டு கடந்ததை அடுத்து அவரது உறவினர்கள் மற்றும் பொது மக்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

மினியாபோலீஸ் நகர சாலைகளில் திரண்ட மக்கள் நினைவு பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் போலீசாரின் வன்முறையால் உயிரிழந்தவர்கள் மற்றும் கறுப்பினத்தவர்கள் குடும்பத்துடன் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

தனது சகோதரரின் இறப்பு, தங்கள் குடும்பத்திற்கு பேரிழப்பு என்றும், தாங்க முடியாத மன அழுத்தம் என ஜார்ஜ் ஃப்ளாய்டின் சகோதரி தெரிவித்தார்.

இதனிடையே ஜார்ஜ் ஃபிளாய்ட் நினைவிடத்துக்கு அருகே மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து அவர் ஹென்னெபின் கவுண்டி மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.