சிகாகோ: ஷாப்பிங் சென்டருக்குள் நுழைந்து கொள்ளையடித்த 100 பேர் கைது!

சிகாகோவில் போராட்டம் நடத்துவது போல வந்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு ஷாப்பிங் சென்டருக்குள் நுழைந்து கொள்ளையடித்த 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சிகாகோவுக்கு அருகே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள எங்லேவுட் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை ஒரு இளைஞரை போலீசார் சுட்டனர். இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து சிகாகோ நகரின் மிக முக்கிய சுற்றுலா பகுதியான மெக்னிஃபிசென்ட் மைல் பகுதிக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர்.

ஞாயிறு இரவு தொடங்கி திங்கட்கிழமை காலை வரை நடந்த வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிக்காகோ டவுன்டவுன் பகுதியில் மென்னிஃபிசென்ட் மைல் வளாகத்தில் உள்ள கடை கதவு, ஜன்னல் உடைப்பு, பொருட்களை கொள்யைடித்தல் போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்தன. இதைக் கட்டுக்கள் கொண்டுவர திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “திட்டமிடப்படாத போராட்டம் போல நிகழ்வுகள் நடந்தன. முழுக்க முழுக்க குற்றம் இழைக்க வேண்டும் என்று இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. கடைசியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

37க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டுள்ளன. கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. குற்ற சம்பவத்தை தடுக்க போலீஸ் சுட்டத்தில் அதிக அளவில் திருடப்பட்ட பொருட்களுடன் தப்ப முயன்ற ஒருவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையாளர்கள் பதில் தாக்குதல் நடத்தியதால் 13 போலீசார் காயம் அடைந்துள்ளனர்” என்றனர்.

கலவரக்காரர்கள் நடத்திய தாக்குதலில் போலீசாரின் வாகனம் உள்பட பல கார்கள் சேதம் அடைந்தன.  அமெரிக்காவில் கடந்த மே மாதம் வெள்ளையின காவல்துறை அதிகாரி ஒருவரால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.