அமெரிக்காவின் கொலரடோ நகரில் திடீர் துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

shooting

அமெரிக்காவின் கொலரடோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

டென்வர் நகருக்கு வடமேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பவுல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மக்களை நோக்கி சுட ஆரம்பித்தார். இதனால் அங்கு ஷாப்பிங் செய்ய வந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அதி விரைவு அதிரடிப்படையினர் மற்றும் எப்பிஐ அதிகாரிகள் பல்பொருள் அங்காடிக்குள் சிக்கிக்கொண்ட மக்களை காப்பாற்ற முயற்சித்தனர்.

Colorado shooting: 10 killed in Colorado supermarket shooting, suspect in  custody | World News - Times of India

இருப்பினும் துப்பாக்கிச்சூட்டில், போலீஸ் அதிகாரி ஒருவர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிசூடு நடத்தியவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர், 35 வயது மதிக்கத்தக்கவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பல்பொருள் அங்காடிக்குள் இருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னும் அப்பகுதி முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் வரவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

பல்பொருள் அங்காடியிலிருந்து தப்பி வந்த ஒருவர், கடைக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும், திரும்பி பார்ப்பதற்குள் 3 பேர் தரையில் விழுந்துகிடந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் இருவர் கார் பார்க்கிங் பகுதியிலும் ஒருவர் நுழைவாயிலிலும் உயிரிழந்து கிடந்ததாக தெரிவித்தார்.

இதிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் திட்டமிட்டே சம்பவ இடத்திற்கு வந்ததும், நுழைந்த அடுத்த நொடியே கண்ணில் படுபவர்களையெல்லாம் சுட்டதும் உறுதியாகியுள்ளது.