டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் மூன்று லட்சம் பேர் உயிரிழப்பர்: ஆய்வில் தகவல்

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,173 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை 4.95 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்ச கொரோனா பாதிப்பு கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களிலேயே அதிகமாக உள்ளது. அங்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

COVID 19

இந்நிலையில் டிசம்பர் மாதத்துக்குள் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாஷிங்டனில் உள்ள ஃபோர் கேஸ்ட்  பல்கலைக்கழக ஆய்வறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. அமெரிக்கர்கள் முறையாக முகக்கவசம் அணிந்தால் இந்த எண்ணிக்கை 2,28,271 ஆக குறையும் என்றும் இதன்மூலம் சுமார் 66,000 மக்களின் உயிர் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும், வெளியில் நடமாடுவதை குறைக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் ஆதிக்க செலுத்த முயற்சிக்கிறது: புலனாய்வுத்துறை