2022 ஆம் ஆண்டு இறுதியில்தான் கொரோனா பிடியிலிருந்து உலகம் மீளும் – பில்கேட்ஸ்

Bill Gates

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் கொரோனா பிடியிலிருந்து உலகம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் என அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸ் கணித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய பில்கேட்ஸ், தனது பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக 1.75 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளார்.

இந்நிலையில் போலந்து நாட்டு செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த பில்கேட்ஸ், “கொரோனா தொற்று மிகப்பெரிய துயரம். ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவெனில், தடுப்பூசி கிடைத்ததுதான். 2022 ஆம் ஆண்டு இறுதியில் தான் கொரோனா தொற்றின் பிடியிலிருந்து உலகம் மீளும்” எனக் கூறினார்.