“ஐசாயாஸ்” புயலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் “ஐசாயாஸ்” புயலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

“ஐசாயாஸ்” என்று பெயரிடப்பட்டுள்ள அதி தீவிர புயல் கடந்த வாரம் புளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்த மாகாணத்தில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. புயலை தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், ஆபத்தான இடங்களில் வசிப்பவர்கள் அரசின் முகாம்களில் தஞ்சமடையவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

storm

இந்நிலையில் அமெரிக்காவின் கிழக்கு கடலோரம் உருவான, “ஐசாயாஸ்” புயல், வடக்கு கரோலினாவில் கரையைக் கடந்தது. மணிக்கு, 105 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலில், ஏராளமான மரங்கள், வேரோடு சாய்ந்தன. இந்த புயலில் சிக்கி மேரிலாந்து, நியூயார்க், டெலவேர் ஆகிய நகரங்களில், பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். அதிதீவிர புயலை தொடர்ந்து பெய்த கன மழையால் பென்சில்வேனியா, பிலடெல்பியா உள்ளிட்ட நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் “ஐசாயாஸ்” புயல் மற்றும் கனமழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் தென் கலிபோர்னியா, வட கலிபோர்னியா, ஜார்ஜியா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்க்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஜூலை மாதம் 22 ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதேபோல் அடுத்த மூன்று நாட்களில் அதாவது ஜூலை 25 ஆம் தேதி, டெக்சாஸ் மாகாணத்தில் ஹெனா என்ற புயல் சூறாவளியாக வலுப்பெற்று அச்சுறுத்தியது. கடந்த இரு மாதங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட மூன்றாவது புயல் “ஐசாயாஸ்” என்பது குறிப்பிடதக்கது. ஒரு புறம் கொரோனா மறுபுறம் இயற்கை பேரிடர்கள் என அமெரிக்க மக்கள் ஏராளமான பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: தப்பு தப்பா தகவல பரப்புவது! சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்ட ட்ரம்ப்பின் பதிவுகள்