டிக்டாக்கை வாங்க ஆசைப்பட்ட மைக்ரோசாப்ட்! தடை போட்ட அதிபர் ட்ரம்ப்

அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தின் செயல்பாட்டை விலைக்கு வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை, அதிபர் ட்ரம்பால் தடைப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா இடையிலான மோதலை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பயனர்களின் தகவல்களை சீனா திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதனால் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாடுகளில் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனமாக மாற்றினால் இழந்த வருவாயையும், நம்பக தன்மையை டிக்டாக் மீண்டும் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது.

Tiktok

 

இந்த நிலையில், டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகளை விலைக்கு வாங்க அதன் தாய் நிறுவனமான பைட்டான்ஸுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்தார். இதனால், இறுதி கட்டத்தை எட்டிய மைக்ரோசாப்ட் – பைட்டான்ஸ் நிறுவனங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பைட் டான்ஸ் நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி என்ற வீடியோ சேவையை வாங்கி அந்த செயலியின் பெயரை டிக்டாக் என மாற்றியது. தற்போது டிக்டாக்கிற்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். எந்த ஒரு சீன நிறுவனமும் அமெரிக்காவுக்குள் வரக்கூடாது என்று கருதியே அதிபர் ட்ரம்ப் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிக்கலாம்: ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராகிறார் இந்திய வம்சாவளி?