வரலாற்றில் இன்று: சுதந்திர தேவி சிலைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட தினம்!

அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் அமைந்துள்ள சுதந்திர தேவி சிலைக்கு 1884-ம் ஆண்டு இதே தேதியில் அமெரிக்காவின் அடிக்கல் நாட்டப்பட்டது. இச்சிலையை பிரான்ஸ் நாடு தான் அமெரிக்காவுக்கு பரிசாக வழங்கியதாம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெடெரிக் ஆகுஸ்டெ பார்த்தோல்டி என்பவரே இந்த சிலையை வடிவமைத்து வழங்கியுள்ளார். சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையையும், மக்களாட்சியையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்கும் இச்சிலை நிறுவப்பட்டு 136 ஆண்டுகள் ஆகிறது.

சுதந்திர தேவி சிலை

அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்துரைக்கும் விதமாக பிரான்சால் அமெரிக்காவிற்கு இந்த சிலை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 1875-ஆம் ஆண்டு இந்த சிலையின் கட்டுமானம் தொடங்கியது. 1884-ஆம் ஆண்டு இச்சிலை முழுமை அடைந்தது. பின்னர் பிரான்சில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு இந்தச் சிலையை அமெரிக்க அரசால் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தமும், இடது கையில் ஒரு புத்தகமும் அமைந்திருக்கும். சுதந்திர தேவியின் தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் உள்ளது. இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும். சிலையின் மொத்த எடை 204.1 டன் ஆகும்.

இதேபோல் அமெரிக்க நடிகை மர்லின் மன்றோ 1962-ஆம் ஆண்டு இதே தேதியில்தான் உயிரிழந்தார். 1947-ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மர்லின் மன்றோ, நகைச்சுவை பாத்திரங்களில் திறம்பட நடிப்பதில் கைத்தேர்ந்தவர். தனது அழகாலும், திறமையாலும் ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியவர்.

இதையும் படிக்கலாமே: டெக்சாசில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை!