கொரோனாவால் உலக நாடுகள் படும் துன்பத்திற்கு சீனாவே பொறுப்பேற்கவேண்டும்- அதிபர் ட்ரம்ப்

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன. கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 29 லட்சத்து 82 ஆயிரத்து 928 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும். வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் கொரோனா தொடர்பான உண்மையை சீனா மறைத்ததே உலகலாளவிய பாதிப்புகளுக்கு முக்கிய காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கும் அதானால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும் சீனா தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவின் 244வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், “கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வந்தாலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை அமெரிக்கா கண்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர்கள் உற்பத்தியும் கொரோனாவுக்கான மிகச்சிறந்த பரிசோதனையும் அமெரிக்காவில் உள்ளது. அமெரிக்காவில் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் ஆகியவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.