ரகசிய அணு ஆயுதத்தை உருவாக்கி உள்ளேன்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து பத்திரிக்கையாளர் பாப் உட்வர்ட் ‘ரேஜ்’என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

அதில் அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றை கையாண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வருகிற 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இந்த புத்தகத்தில் இருக்கும் சில தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேஜ் புத்தகம் டிசம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2020 ஆம் ஆண்டு வரை ட்ரம்பிடம் உட்வார்ட்டு நடத்திய 18 நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

Trump
Image: BBC

நேர்காணலின்போது பாப் உட்வர்ட்டிடம் ட்ரம்ப், “நான் ஒரு ரகசிய அணு ஆயுதம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னர் இந்த நாட்டில் யாரும் இல்லாத ஆயுத அமைப்பை அமெரிக்க ராணுவத்தில் உருவாக்கியுள்ளேன்.

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இதற்கு முன்னர் கேள்விப்படாத “பொருள்” அமெரிக்காவில் உள்ளது.

எங்களிடம் அந்த பொருள் இருப்பதை யாராலும் நம்பமுடியாதது” எனக் கூறினார்.

மற்றொரு பேட்டியில் பாப் உட்வர்ட்டிடம் ட்ரம்ப், அதிபர் கிம் அவரது மாமாவை அவரே கொலை செய்ததாகவும், அதனை கிம்மே தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ட்ரம்புக்கு ஜனவரி மாதமே கொரோனா தொற்றின் வீரியம் நன்றாக தெரியும் என்றும், அதனை ட்ரம்ப் பெரிதாக எடுத்துக்கொள்ளாததே அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு காரணம் என்றும் ரேஜ் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த ட்ரம்ப், “நான் இந்த நாட்டின் உற்சாகத்தை கூட்டும் தலைவன். என்றும் தான் நேசிக்கும் மக்கள் அச்சத்தை அடைய விரும்பவில்லை.

இந்த நாட்டை பலவீனப்படுத்தவும் விரும்பவில்லை. அமெரிக்கர்கள் ஒன்றுக்கூடு கொரோனாவை ஒழிக்க வேண்டும்.

மக்களிடையே பதற்றத்தை அதிகரிக்க கூடாது என்பதற்காகவே நான் கொரோனா குறித்த உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை” என விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெயர் சூட்டல்!