அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றியைத் திருட முயற்சி செய்கின்றனர்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில், முறைகேடு செய்து வெற்றியைத் திருட ஜனநாயகக் கட்சியினர் முயல்வதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார். அதிபர் ட்ரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவரும் நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்நிலையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்பட்ட பின்னர், வடக்கு கரோலினாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அதிபர் ட்ரம்ப், மின்னஞ்சல் மூலம் வாக்குகளைப் பதிவது மோசடிக்கு வழிவகுக்கும் என்று ட்ரம்ப் தனது கட்சியினரை எச்சரித்தார். அமெரிக்க மக்களை ஏமாற்ற கோவிட் – 19 பிரச்னையை ஜனநாயகக் கட்சியினர் பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் விமர்சித்தார். தேர்தலில் முறைகேடுகள் செய்தால் மட்டுமே வெற்றியை தங்களிடமிருந்து அவர்களால் பறிக்க முடியும் ஜனநாயகக் கட்சியினரை டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார்.