பொய்… பொய்… பொய்… யாரும் நம்பாதீங்க – அதிபர் ட்ரம்ப் ட்வீட்

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்நாட்டு அரசுக்கும் தாலிபான் பயங்கரவாதிகளுக்குமிடையே உள்நாட்டுப்போர் நடந்துவருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்கா ராணுவம் ஆதரவு அளித்துவருகிறது. இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட ட்ரம்ப், தாலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுது இருதரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்கா உறுதியளித்து. இதற்கிடையில் ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான்களுக்கு ரஷ்யா ஆயுதம் வழங்கிவருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க துருப்புகள் மீது தாக்குதல் நடத்த தாலிபான்களுக்கு ரஷ்யா பணம் கொடுத்திருப்பதாகவும், அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலை ரஷ்யா ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், “தாலிபான்களுக்கு, ரஷ்யா நிதி உதவி அளித்தது தொடர்பாக, என்னிடம் யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டை அனைத்து தரப்பினரும் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், நம் படைகள் மீது எந்த தாக்குதலும் இதுவரை நடக்கவில்லை. இந்த தகவல்கள் அனைத்து பொய். ரஷ்யா மீது என்னுடைய அரசை போல எந்த அமெரிக்க அரசும் கண்டிப்புடன் நடந்து கொண்டதில்லை. இது போலி செய்தி” எனக் குறிப்பிட்டுள்ளார்.