புதிய கட்சியை தொடங்க போவதில்லை- முன்னாள் அதிபர் ட்ரம்ப்

Donald Trump

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிய கட்சியை தொடங்க போவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த அரசியல் நிகழ்வில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்டார்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறிய பிறகு, ட்ரம்ப் கலந்துகொள்ளும் முதல் அரசியல் நிகழ்வு இதுவாகும். அப்போது பேசிய, “நான் புதுக் கட்சியைத் தொடங்கப் போவதில்லை. எனக்கென்று குடியரசுக் கட்சி இருக்கிறது.

அதனுடன் பயணித்து வலுவாக்குவேன். அதற்கு மாற்றாக நான் எந்தக் கட்சியையும் தொடங்கப் போவதில்லை.

புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், எந்தவொரு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவில்லை. அவருடைய மோசமான செயல்பாடுகளை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்துவருகிறேன்.

Trump
Image: BBC

அப்போது ஜனநாயகக்கட்சி என்னிடம் படுதோல்வி அடையும். நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்.

முதலில் அமெரிக்கா என்பதில் இருந்து கடைசியில் அமெரிக்கா என அமெரிக்காவின் கொள்கைகள் மாறியுள்ளன.

நம் கட்சியின் எதிர்காலம், நாம் நேசிக்கும் நம் நாட்டின் எதிர்காலத்தை குறித்துப் பேசவே இங்கு கூடியுள்ளோம்” என உற்சாகமாக கூறினார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட  ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதன்பின் ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்றார்.

ஜோ பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த ட்ரம்ப்பும், அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.