சுந்தர்பிச்சை உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த டிரம்ப்

Donald Trump

அதிபர் பதவியை இழந்து சிறிதுகாலம் அமைதியாக இருந்த முன்னாள் அதிபர் டிரம்ப், டிவிட்டர், பேஸ்புக், கூகுள் ஆகிய சமூக ஊடகங்கள் மீது புளோரிடா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோற்றதன் எதிரொலியாக அவரது ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபடனர்.

இந்த திடீர் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இதனையடுத்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கணக்கு உட்பட பல்லாயிரக்கணக்கானோரின் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியுப் ஆகிய சமூக ஊடக கணக்குகள் முடக்கப்பட்டன.

டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்படும் என்று கூறப்பட்டது. அதே வேளையில் மற்றொரு சமூக ஊடகமான டிவிட்டர் டிரம்பின் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் சம்பவம் நடந்து 6 மாத காலத்திற்கு பிறகு ட்ரம்ப் தனது கணக்குகளை நீக்கிய சமூக ஊடகங்கள் மீது ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

trump

அதன்படி கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பயனர்களின் கணக்குகளை முடக்கியதை அடுத்து இந்த நிறுவனங்கள் கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கும் அமெரிக்க நாட்டின் முதல் சட்ட திருத்தத்தை மீறியுள்ளதாகவும், இதனையடுத்து சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நியுஜெர்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப், இந்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுத்த தன்னுடன், பாதிக்கப்பட்ட பலரும் தங்களை இணைத்துக் கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் கருப்புப் பட்டியலிடுவது, கருத்து சுதந்திரத்தைத் தடை செய்வது போன்ற சமூக ஊடகங்களின் அராஜகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்திய அவர் இந்த வழக்கில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்பின் வழக்கு தொடுத்துள்ளதைப் பற்றி சமூக ஊடகங்கள் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.

அதேவேளையில் டிரம்பின் வழக்குகள் தொடக்கத்திலே செல்லாதாகி விட்டது எனவும், அமெரிக்காவின் முதல் சட்டதிருத்தம் அரசாங்கத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் தனியார் நிறுவனங்களுக்கு அது பொருந்தாது என்றும் வணிகம் மற்றும் மனித உரிமைகளுக்கான NYU மையத்தின் துணை இயக்குனர் பால் பாரெட் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடக நிறுவனங்கள் முதல் திருத்தத்தை மீறுவதாக தொடரப்பட்ட வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.