இனி குலுக்கல் முறையில் ஹெச்1பி விசாக்கள் இல்லை! அமெரிக்காவுக்கு பதில் நிலாவில் குடியேறலாம் போல…

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்1பி விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வெளிநாட்டவர்கள் வந்து தற்காலிகமாக பணியாற்றுவதற்காக அமெரிக்க அரசு ஹெச்1பி, ஹெச்2 பி, எல்1 உள்ளிட்ட விசாக்களை வழங்குகிறது. இவற்றில் ஹெச்1பி விசா இந்திய ஐடி ஊழியர்கள் மத்தியில் பிரபலமானது. குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை வாய்ந்த வெளிநாடுகளை சேர்ந்த நபர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. அதாவது ஊதிய நிலை மற்றும் திறமை என இரண்டையும் கவனத்தில் கொண்டே இந்த விசா வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி தான் இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி ஊழியர்கள் அமெரிக்கா சென்று பணியாற்றுகின்றனர்.

அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெற்றுள்ள 13 லட்சம் பேரில் 8 லட்சம் பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இரண்டே கால் லட்சம் பேர் ஹெச்1பி விசாவுக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு குலுக்கல் முறையில் விசா வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 85 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஹெ1பி விசாக்களை வழங்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு வைத்துள்ளது. இப்படி விசா பெறுபவர்களில் 70 சதவிகிதம் பேர் இந்தியர்கள். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1.84 லட்சம் இந்தியர்கள் ஹெச்1பி விசா கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஹெச்1பி விசா வழங்குவதற்கு இந்த ஆண்டு இறுதிவரை தடை விதித்து ட்ரம்ப் நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. இதன்படி ஏற்கனவே ஹெச்1பி விசா பெற்று அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

வருகிற டிசம்பர் வரை புதிதாக யாருக்கும் விசா கிடைக்காது. அதன் பின்னர் கூட பழைய முறைப்படி குலுக்கல் நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக அதிக திறமை அதிக சம்பளம் என தகுதி அடிப்படையில் தான் விசா வழங்கப்படும். இதனால் அடுத்த 6 மாதங்களுக்கு இந்திய நிறுவனங்கள் இங்கிருந்து தங்களது ஊழியர்களை அமெரிக்காவுக்கு பணிக்கு அனுப்பி வைக்க முடியாது. அந்தப் பணிக்கு அமெரிக்கர்கள்தான் நியமிக்கப்படுவர். உள்நாட்டவருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு ட்ரம்ப் நிர்வாகம் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது. நவம்பரில் அதிபர் தேர்தல் வரும் நிலையில், அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற தனது கொள்கையை நிலைநாட்டவும் இழந்த செல்வாக்கை மீட்கவும் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.