அமெரிக்காவில் ஓயாத கறுப்பினத்தவர்களின் போராட்டம்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ட்ரம்ப் டவர் முன்பாக கறுப்பினத்தவருக்காக குரல் கொடுக்கும் வாசகம் பிரம்மாண்டமாக எழுதப்பட்டுள்ளது.

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

இந்நிலையில் ஜார்ஜ் பிளாயிட்  காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கறுப்பினத்தவரின் வாழ்க்கை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் (BLACK LIVES MATTERS) வாசகம் வலுப்பெற்றுவருகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள ட்ரம்ப் டவர் முன்பாக மிகப்பெரிய எழுத்துகளில் மஞ்சள் வர்ணத்தில் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் என்று எழுதப்பட்டுள்ளது. நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் பங்கேற்று எழுத்துகளுக்கு வண்ணம் தீட்டினர். இதுபோன்ற பிரம்மாண்ட வண்ண எழுத்துகள் நியூயார்க்கின் சாலைகளிலும், தலைநகர் வாஷிங்டன், வடக்கு கரோலினா, ஆக்லாந்து, கலிபோர்னியாவிலும் எழுதப்பட்டுள்ளன.