அம்மாவை பார்க்கபோனது குற்றமா! அமெரிக்க வாழ் இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றுமா அதிபர் தேர்தல் முடிவுகள்?

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்திய ஐடி ஊழியர்கள் பயன்படுத்தும் ஹெச்1பி விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைப்பதாக டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பல இந்திய குடும்பங்கள் தத்தளிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

உதாரணம்… அமெரிக்காவின் நியூஜெர்சியில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் குடும்பத்துடன் வசித்துவரும் சென்னையை சேர்ந்த ஒரு அமெரிக்க வாழ் இந்திய பெண், கடந்த மார்ச் மாதம் சென்னையிலுள்ள தனது அம்மாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்காவிலிருந்து பறந்து வந்துள்ளார். ஆனால் கடல்தாண்டியிருக்கும் மகளை தாயுடன் ஒருவருடத்திற்கு சேர்த்துவைத்தது ட்ரம்ப் நிர்வாகம். அந்த பெண்ணிடம் இருப்பது எச் 4 விசா. அவரது கணவர் எச் 1 பி விசா கொண்ட ஐ.டி ஊழியர். தாயை பார்த்துவிட்டு ஊர் திரும்பலாம் என நினைத்தவருக்கு இடியாய் விழுந்தது ட்ரம்ப் உத்தரவு. இதனால் அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை இந்த ஆண்டு முழுவதும் பார்க்க முடியாமல் போனது.

இதேபோல் வேலை, படிப்பு என கனவு கண்ட எத்தனையோ இந்தியர்களுக்கு ட்ரம்பின் உத்தரவு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணைவர்களை நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கிறது. இதனால் பல குடும்பங்கள் தங்களது அன்புக்குரியவர்களை பிரிந்து வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக, அமெரிக்காவில் பணிபுரியும் அல்லது தங்கியிருக்கும் ஏராளமான நபர்கள் இந்தியாவில் சிக்கித் தவிக்கின்றன. அவர்கள் அனைவரும் இந்த ஆண்டு முழுவதும் தங்களது வேலைக்கு செல்ல முடியாது. அதன்பிறகு சென்றால் வேலை இருக்குமோ இருக்காதோ என்ற அச்சம் ஒவ்வொரு இந்தியர்களின் மனதிலும் தோன்றுகிறது. இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒவ்வொருவரும் வேலை, நிதி பிரச்னை, சுகாதார அச்சுறுத்தல் இப்படி பல பிரச்னைகளால் சிக்கித்தவித்துவருகின்றன. இதற்கெல்லாம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் தீர்வாகுமா? புதிய அதிபர் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியேற்ற சீர்திருத்த திட்டங்கள் மாற்றியமைக்க வாய்ப்புள்ளதா என்பதே அனைத்து அமெரிக்க வாழ் இந்தியர்களின் கனவாக உள்ளது.