அமெரிக்காவில் காவல்துறையினர் தாக்குதலால் 751 பேர் உயிரிழப்பு!

Protest

அமெரிக்காவில் காவல்துறையினரின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் 751 பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

கடந்த மே 25 ஆம் தேதி அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

Protest

இதேபோல் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள கெனோஷா நகரில் ஜேகப் பிளேக் என்ற கருப்பின இளைஞர் மீது காவல்துறையினர் 7 முறை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஸ்கான்ஸின் மாகாணம் மட்டுமின்றி அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து லுாசியானா மாகாணத்தில் உள்ள, லபாயெட் நகரை சேர்ந்த மற்றொரு கருப்பின இளைஞர் ட்ரேபோர்டு பெல்லரின் என்பவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதால் போராட்டம் தீவிரமடைந்தது. காவல்துறையினர் மக்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறையை கைவிட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினரின் அடக்குமுறைகளை கண்காணிக்கும் அமைப்பு ஒன்று ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை, அமெரிக்காவில் காவல்துறையினர் நடத்திய தாக்குதலின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி 751 பேர் காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 28 சதவிகிதம் பேர் ஆப்ரிக்க அமெரிக்கர்கள். கடந்த 235 நாட்களில் 12 நாட்களில் மட்டும் தான் காவல்துறையினரால் யாரும் கொல்லப்படவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் தொடங்கப்பட்ட தமிழ் பள்ளி!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa