போயிங் 777 விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 அதிகாரிகளுடன் ஹோனோலுலுவுக்கு புறப்பட்ட யுனிட்டடு 328 என்ற விமானம் சென்றுக்கொண்டிருக்கும்போது திடீரென தீப்பற்றி எரிந்தது.

அதாவது விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே என்ஜினின் வலதுபுறம் தீப்பற்றியது. எரிந்த பாகங்கள், புரோம்ஃபீல்டு நகரம் முழுவதும் சிதறிகிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் விமானத்தின் எரிந்த பாகங்கள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விமானத்தில் தீ பற்றியதை தொடர்ந்து, அந்த விமானம் டென்வர் விமான நிலையத்திற்கே திருப்பிவரப்பட்டு தரையிறக்கப்பட்டது.

இதனால் விமானத்திலிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த விமானத்திலிருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

United Will Temporarily Stop Flying Some Boeing 777 Planes After Engine  Failure

இந்த விபத்தை தொடர்ந்து அமெரிக்காவில்  புழக்கத்தில் உள்ள பிராட் மற்றும் விட்னி பி.டபுள்யூ 4000 சீரீஸ் என்ஜின்களுடன் கூடிய போயிங் 777 விமானங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை போயிங் விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.

இச்சம்பவத்தை தொடர்ந்து ஜப்பானைச் சேர்ந்த  விமான நிறுவனங்களும்  தென்கொரியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் போயிங் 777 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.