லடாக் பிரச்னை: இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து படைகளை அனுப்பிய அமெரிக்கா!

சீனாவுடன் லடாக் எல்லையில் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது. லடாக் எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடுத்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கெலெய்ஜ் மெக்எனானி தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பிற பகுதிகளை ஆக்கிரமிப்பதை போல, லடாக் எல்லையிலும் சீனா தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக கூறினார். இறையாண்மையை காப்பதற்காக சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது வரவேற்க்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். இதே போல் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபிளாரென்ஸூம், சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு, பக்கபலமாக இருப்போம் என தெரிவித்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

சர்வதேச எல்லைப் பகுதியில் சீனா மேற்கொள்ளும் எந்தவொரு மாறுதல்களையும் ஏற்க முடியாது என ஜப்பான் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதே நேரம் பேச்சுவார்த்தைகள் மூலம் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு ஏற்படும் எனவும் ஜப்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதே போல், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஆசியான் அமைப்பில் இருக்கும் நாடுகளும் எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. ஏற்கெனவே தென் சீனக் கடல் பகுதியில் செயற்கையான தீவுகளை உருவாக்கி, அங்கு ராணுவ நிலைகளை சீனா நிறுத்தியதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையிலும், சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒரே அணியில் ஒன்றிணைந்திருப்பது, அந்நாட்டுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் மற்றும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் தென் சீன கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டதாக அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவே இவ்விரு கப்பல்களும் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.